SOURCE :- BBC NEWS
1,60,000 ஆண்டுகளாகக் காணப்படாத ஒரு பிரகாசமான வால் நட்சத்திரம், வரும் நாட்களில் உலகெங்கும் உள்ள வான்வெளியில் தென்படலாம் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
ஒரு வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போது பார்க்க முடியுமா என்று கணிப்பது மிகவும் கடினம். ஆனால் C/2024 G3 (ATLAS) எனும் வால் நட்சத்திரம் தொலைநோக்கி இல்லாமல், வெறும் கண்களால் பார்க்கும் அளவுக்கு அளவுக்கு பிரகாசமாக இருக்கும் என்று இந்த அரிய வால்நட்சத்திரம் குறித்து நாசா குறிப்பிட்டுள்ளது
திங்கட்கிழமை, சூரியனுக்கு மிக அருகில் உள்ள பெரிஹெலியன் எனப்படும் வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் இந்த வால் நட்சத்திரம் இருந்தது. அது மட்டுமின்றி, பெரிஹெலியன் வால் நட்சத்திரத்தின் பிரகாசத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை இரவு முதல் இந்த அரிய வால் நட்சத்திரத்தைப் பார்க்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதனைக் காணக்கூடிய சரியான இடங்களை இன்னும் குறிப்பிட முடியவில்லை என்றாலும், வீனஸைப் போல பிரகாசமாக இருக்கக்கூடிய இந்த வால் நட்சத்திரத்தை , தெற்கு அரைக்கோளத்தில் இருந்து சிறப்பாகக் காண முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நாசாவின் ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (அட்லாஸ்) எனும் அமைப்பு கடந்த ஆண்டு இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டறிந்தது.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வானியற்பியல் இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆராய்ச்சியாளரான முனைவர். ஷியாம் பாலாஜி, “தற்போதைய ஆய்வுகள், சூரியனிலிருந்து சுமார் 8.3 மில்லியன் மைல் தொலைவில் இந்த வால் நட்சத்திரம் இருக்கும் என்று காட்டுகின்றன”, என்று விளக்கினார்.
இந்த அரிய வால் நட்சத்திரத்தை 1,60,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி விவரித்துள்ளது.
வால் நட்சத்திரத்தைப் பார்க்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கிய முனைவர் பாலாஜி, “சூரியனுக்கு மிக அருகில் உள்ள பெரிஹெலியனை அதாவது வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் உள்ள நாட்களில் அதன் நிலைமை மற்றும் வால் நட்சத்திரத்தின் நடவடிக்கையை பொறுத்து” தோன்றலாம் என்று குறிப்பிட்டார்.
வால் நட்சத்திரத்தை எங்கே, எப்படி பார்ப்பது?
வால் நட்சத்திரத்தைப் பார்க்க விரும்பும் மக்கள் ஒளி மாசுபாட்டிலிருந்து விலகி ஒரு இடத்தைக் கண்டறியவும், பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கியைப் பயன்படுத்தவும் முனைவர் பாலாஜி அறிவுறுத்தினார்.
சூரிய உதயத்தின் போதும், சூரியன் மறையும் போதும் விழிப்புடன் இருக்குமாறு பார்வையாளர்களை அறிவுறுத்திய அவர், வால் நட்சத்திரம் வானத்தில் எங்கு தோன்றக்கூடும் என்பதை கணிக்க அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் பரிந்துரைத்தார்.
இதற்கிடையில், வானியலாளர்களும் வால் நட்சத்திரத்தின் பாதையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமையன்று, நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வால் நட்சத்திரத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
“சுற்றுப்பாதையில் இருந்து ஒரு வால் நட்சத்திரத்தைப் பார்ப்பது முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. ATLAS C2024-G3யை எங்களால் பார்க்க முடிகிறது ” என்று அரிய வால் நட்சத்திரத்தைக் குறித்து டான் பெட்டிட் பதிவிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC